சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோபாலா இன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
மனோபாலாவின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அவரது உடலுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யும் சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் இல்லம் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மனோபாலாவுக்கு அஞ்சலி செலுத்திய விஜய்: இயக்குநரும் நடிகருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். 69 வயதான மனோபாலா, கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 உட்பட சில படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட மனோபாலா இன்று காலமானார்.
இதனையடுத்து சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தளபதி விஜய்யும் நடிகர் மனோபாலா உடலுக்கு அவரது இல்லம் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், தற்போது காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், மனோபாலா உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியான விஜய், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லியோ படத்திற்காக கெட்டப் சேஞ்ச் செய்துள்ள விஜய், அதே லுக்கில் மனோபாலா இல்லம் சென்றார். அவர் வரும் தகவலை முன்கூட்டியே தெரிந்திருந்த போலீஸார், அந்தப் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர்.
இதனால் ரசிகர்களின் தள்ளுமுள்ளுகளில் சிக்காமல் மனோபாலாவின் இல்லம் சென்ற விஜய், மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார். அப்போது மனோபாலாவின் உடலை பார்த்து கண்ணீர்விட்ட விஜய், அவரது மகன், மனைவி ஆகியோரின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆறுதல் தெரிவித்தார். சமீபத்தில் அஜித்தின் தந்தை மறைவுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய், தற்போது மனோபாலா உடலுக்கும் இறுதி மரியாதை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் மின்சார கண்ணா, அழகிய தமிழ் மகன், தலைவா, துப்பாக்கி, நண்பன், தெறி, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார் மனோபாலா. இந்தப் படங்களில் விஜய் – மனோபாலா ஆகியோரின் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. முன்னதாக பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் ஒரு ஷாட்டில் நடிக்க வேண்டும் என்றாலும் நான் ரெடி என பேசியிருந்தார்.