முன்னாள் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு மீது ஆர்வம் கொண்டவர். விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகளை வீட்டில் வளர்த்து வருகிறார். அவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடு பிடி வீரர்களை மிரட்டி செல்லும். விஜயபாஸ்கரின் காளைகள் ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளது.
விஜயபாஸ்கரின் காளைகள் மிரட்டுவதை பார்க்கவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் ரசிகர்கள் திரண்டிருப்பார்கள். விஜயபாஸ்கரின் காளைகள் இறங்கிறது என்றாலே அதற்கான வர்ணனையும் அசத்தலாக இருக்கும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த அந்த காளையை அடக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் வாடி வாசல் முன்பு திரண்டு நின்றனர்.
அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வரும் வழியில் இருந்த கம்பத்தின் மீது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை மோதியது. இதனால் நிலைக்குலைந்த கருப்புக் கொம்பன் காளை, அங்கேயே மயங்கி விழுந்தது. இதனை பார்த்த மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக கருப்புக் கொம்பன் காளை மீட்கப்பட்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கருப்புக் கொம்பன் காளை இன்று காளை உயிரிழந்தது. கருப்புக் கொம்பன் காளை மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற விஜயபாஸ்கரின் கொம்பன் காளை வாடிவாசல் முன்பு இருந்த சுவற்றில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து ஜல்லிக்கட்டு களத்திலேயே மரணமடைந்தது.
அந்த காளை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு விஜயபாஸ்கரின் வெள்ளைக் கொம்பன் காளை உயிரிழந்தது. ஏராளமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற வெள்ளைக் கொம்பன் காளை வயது மூப்பு காரணமாக மரணமடைந்தது. ஏராளமான பரிசுகளை வென்ற வெள்ளைக் கொம்பன் காளையும் விஜயபாஸ்கரின் தோட்டத்திலேயே புதைக்கப்பட்டது.
தற்போது மூன்றாவதாக விஜயபாஸ்கர் பாசமாக வளர்த்து வந்த காளை உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரையும் ஊர் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கருப்புக் கொம்பன் காளையும் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.