தமிழகத்தில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கான ஏற்பாடுகள் பள்ளிக் கல்வித்துறை தலைமையில் எமிஸ் (EMIS) எனப்படும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. மே 8ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆசிரியர்கள் கலந்தாய்வு
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நாட்களில் கலந்தாய்வு நடக்கிறது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டியது இல்லை என்ற சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. கலந்தாய்வை பொறுத்தவரை மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளியாக நடத்தப்படும்.
எமிஸ் இணையக்குழு
ஆசிரியர்கள் தாங்கள் மாற விரும்பும் பள்ளிகளை முன்கூட்டியே தேர்வு செய்து வைக்க வேண்டும். இதற்காக 12 வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதன்படி, தங்கள் பணி மாறுதலுக்கு செல்ல விரும்பும் 12 பள்ளிகளை விருப்ப அடிப்படையில் வரிசைப்படுத்தி தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு புதிய வசதியை எமிஸ் இணையக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
காலிப் பணியிடங்கள்
அதாவது, ஆசிரியர்கள் தங்களின் எமிஸ் லாகின் மூலம் இணையதளப் பக்கத்திற்கு சென்று எந்த மாவட்டத்தில் எத்தனை காலியிடங்கள் இருக்கின்றன என்ற விவரத்தை செல்போனில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக Pre-Select Vacancy என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு சென்று எதிர்பார்க்கப்படும் காலிப் பணியிடங்களை தேர்வு செய்யலாம். முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தான் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
மொபைல் போனில் பார்க்கலாம்
தற்போது தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, கலந்தாய்வின் நிலவரம், தங்களுக்கான வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். முதல்முறை இப்படி ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. எளிதாக தங்கள் மொபைல் போனிலேயே பார்த்து காலிப் பணியிடங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பணி மாறுதலுக்கு திட்டமிடலாம்.
சிவப்பு நிறத்திற்கு மாறிடும்
கலந்தாய்வு நடைபெறும் போது ஆசிரியர்கள் தேர்வு செய்த பணியிடங்கள் அனைத்தும் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். இதன்மூலம் அந்த பணியிடத்தை வேறொரு ஆசிரியர் எடுத்துக் கொண்டார் எனத் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய மொபைல் வசதி மூலம் ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை வெளிப்படைத் தன்மை உடன் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.