ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சனாதன எஜமானர்களை திருப்திப்படுத்தலாம் – ஸ்.டி.பி.ஐ. விளாசல்

திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று கருத்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்வினையாற்றி வரும் நிலையில் ஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொருந்தாதவர். தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் அவரை திரும்பப்பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், திராவிட மாடல் என்பது முழக்கம் மட்டுமே. அது காலாவதியான கொள்கை என்றும், ஒரே பாரதம், ஒரே இந்தியா கருத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

சமத்துவம், சமூகநீதி, சமதர்மமே திராவிட சித்தாந்தம். இந்த திராவிட சித்தாந்தத்திற்கு எதிரான, பிறப்பின் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தும் பிற்போக்குக் தனமான சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஆளுநர், திராவிடத்தை காலாவதியான கொள்கை என சாடுவதில் ஆச்சர்யமில்லை.

ஆனால், அரசியல், மத, சாதி, மொழி, பாலின ரீதியான பாரபட்சமற்ற நிலையை கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒரு அரசியல் சாசன பதவியை தான் வகிப்பதையும், அரசியலமைப்பு சட்டத்தின் மீதே தனது விசுவாசமும், உறுதிப்பாடும் இருக்க வேண்டும் என்பதையும் மறந்துவிட்டு, அதற்கெதிராகவே அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டம் மட்டுமே. ஆனால், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்றும், ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது என்று பேசி, மனித சமத்துவத்தை மறுக்கும், நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன வருணாசிரம தருமத்தை அவர் உயர்வாக தூக்கிப் பிடிக்கின்றார்.

அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய தமிழக ஆளுநர், ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தைக் கெடுத்து வருகின்றார். அரசமைப்பின் பிரகாரம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராகவும், ஆளுநர் பதவிக்கும், அதன் செயல்பாடுகளுக்கும் ஒரு தவறான முன்மாதிரியை உருவாக்கும் வகையில், சனாதனத்தை பரப்பும் பணிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார். அவரின் செயல்பாடுகள் சனாதன ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளின் முகவராகவும், ஊதுகுழலாகவும் உள்ளது.

முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு எண்ணமும் கொண்ட அவர், தமிழ் மண்ணின் அடையாளமான திராவிட எழுச்சியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி முறையையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் பேசிவருகின்றார். இத்தகைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

ஆகவே, ஆளுநர் என்ற மதிப்புமிக்க பதவியை ஆர்.எஸ்.எஸ்ஸின் முகவராக தவறாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தை கெடுக்கும் தமிழக ஆளுநர் ரவி, தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனது சனாதன எஜமானர்களை திருப்திப்படுத்த உழைப்பதே சிறந்ததாக இருக்கும் என இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.