பிரதமரின் மன் கி பாத் உரையைக் கேட்காத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
100வது மன் கி பாத்
சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. அதில் பல முக்கிய காரணிகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். 100வது நிகழ்ச்சி என்பதால் பாஜக நாடு முழுவதும் தடபுடல் ஏற்பாடுகளை செய்தது. பிரதமர் மோடியின் உரை ஐக்கியநாடுகள் சபையிலும் ஒலிபரப்பானது.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்து பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றுக் கொண்டது முதலே, மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களை மக்களிடம் உரையாற்றி வருகிறார். 2014ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலியில் பிரதமர் உரையாற்றி வருவது குறிப்பிடதக்கது.
கேட்காத மாணவர்கள்
இந்தநிலையில் பிரதமரின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியை புறக்கணித்த பள்ளி மாணவர்களுக்கு அபராதம் விதித்து டேராடூன் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பிரதமரின் நிகழ்ச்சியைக் காண கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி, 100வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றியதை மாணவர்கள் புறக்கணித்ததாக டேராடுன் தனியார் சிபிஎஸ்சி பள்ளிக்கு தெரியவந்துள்ளது. அதையடுத்து பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த மாணவர்கள் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் அல்லது நிகழ்ச்சியை தவிர்ப்பதற்கு உண்மையான காரணம் எது என மருத்துவ சான்றிதழ் கொடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் புகார்
பின்னர் இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்த நிலையில், மாநில கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்த பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த சூழலில் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ‘‘மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சில எச்சரிக்கைகளை கொடுத்தோம். மற்றபடி அபராதம் எதுவும் வசூலிக்கப்படவில்லை’’ என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ‘‘பெற்றோர்களிடம் பெறப்பட்ட புகார்களின் பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய விளக்கத்தை அளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது’’ என தலைமை கல்வி அதிகாரி பிரதீப் குமார் ராவத் தெரிவித்துள்ளார்.