கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அ. ர. சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.
உணவு வழங்கல் துறை சார்பாக தரமான பொருட்கள் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தரமான அரிசியை வழங்கி வருகிறோம். 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மற்றும் கண் ஸ்கேன் மூலம் பொருட்களை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.மேலும் அனைத்து ரேஷன் கடைகளில் பணம் இல்லாமல் கியூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை செய்து உணவு பொருட்களை பெற இன்று கோவையில் துவங்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை தொலைந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது எனவும் திமுக அரசு என்பதால் மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என குற்றம் சாட்டினார்.
இந்நிகழ்வில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.