சிவகங்கை: இரண்டு மாவட்ட ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்கவே கர்நாடகா, ஆந்திராவில் கொள்முதல் செய்கிறோம். இதனால் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
அவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக ஆட்சியின் 2 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ரேஷன் கடைகளில் ‘க்யூஆர் கோடு’ மூலம் பணம் செலுத்தும் திட்டம் பரிசார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
நாகரீகம் என்ற பெயரில் சிறுதானியங்களை பயன்படுத்துவதை நிறுத்தியதால், தமிழகத்தில் சிறுதானியங்கள் உற்பத்தியும் குறைந்தது. தற்போது மருத்துவர்கள் ஆலோசனைபடி சிறுதானியங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சிறுதானியங்கள் தேவையான அளவு உற்பத்தி இல்லாததால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அவற்றை விநியோகிப்பதில் சிக்கல் உள்ளது. நீலகிரி, தர்மபுரி மாவட்டத்தில் பரிசார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களுக்கே கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. மேலும் சிறுதானியங்களை தமிழகத்தில் ஒரு கிலோ ரூ.18 என்ற அளவிலேயே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தற்போது தான் உணவுத்துறை மூலம் ஒரு கிலோ ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது. அதை முறையாக செயல்படுத்த வேண்டும். விரைவில் அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.