அமெரிக்காவின் பாஸ்டான் மாகாணத்தை சேர்ந்தவர்கள் லெனாக்ஸ் மற்றும் லீட்டா தம்பதி. இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அதன் பிறகு இரண்டு முறை கருத்தரித்தும் அந்தக் கரு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே கலைந்துள்ளது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் லீட்டா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். குழந்தை, மூன்று மாதங்களைக் கடந்து வளர்ந்து கொண்டிருந்ததால் தம்பதி மிகவும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். குழந்தையின் வளர்ச்சியை பற்றி தெரிந்துகொ ள்ள ஏழாவது மாத கர்ப்பத்தின்போது மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் லீட்டா. அங்கு அவருக்கு நடந்த சோதனையில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் மூளையில் உள்ள ரத்தநாளம் சரியாக வளர்ச்சி அடையாததால், அங்கிருந்து இதயத்துக்கு அதிகப்படியான ரத்தம் செல்வதை கண்டறிந்துள்ளனர். இந்த அரிய மூளை நிலையை `வீனஸ் ஆஃப் கேலன் குறைபாடு’ என்பர்.
இதேநிலை தொடர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அல்லது குழந்தை பிறக்கும் போதே இதயம், மூளை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இதயம் மற்றும் மூளை பாதிப்பினால் பிறக்கும் குழந்தையும் சில காலமே உயிர்வாழும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் லெனாக்ஸ் – லீட்டா தம்பதி உடைந்து அழுதுள்ளனர்.
இவர்களின் நிலை அறிந்த மருத்துவர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் ரத்த நாளத்தை சரி செய்யும் முயற்சியை கையில் எடுத்தனர். தாங்கள் மேற்கொள்ள உள்ள அறுவை சிகிச்சை பற்றி அந்தத் தம்பதியிடம் மிகவும் தெளிவாகவும் விளக்கினர்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தால் ஒருவேளை குழந்தை நல்லபடியாக உயிர்பிழைக்கலாம் அல்லது உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றாலும் உயிரிழக்கத்தான் போகிறது, அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைக்க சிறிய வாய்ப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர் தம்பதி.
அறுவை சிகிச்சையின் போது, தாய் லீட்டாவின் வயிற்றில் ஒரு சிறிய துளையிட்டு அதன்மூலம் ஊசி போன்ற மிக சிறிய கருவியின் மூலமாக கருவில் இருக்கும் குழந்தையின் தலையில் துளையிட்டுள்ளனர். பின்னர் எலக்ட்ரிக் காயில் போல இருக்கும் ஒரு கருவியின் மூலமாக, ஊசி மூலம் குழந்தையின் மூளையில் இருக்கும் ரத்த நாளத்தை சரி செய்துள்ளனர். அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தையின் மூளையில் இருந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து சரியான விகிதத்தில் செல்ல ஆரம்பித்தது. இனி குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, வளர்ந்த பிறகும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க மருத்துவர்களின் இந்த சாதனை மருத்துவ வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக ஆச்சர்யப்படவைத்துள்ளது.