சென்னை: கரோனா அவசரநிலை முடிவுக்கு வந்தாலும் தனி மனித பாதுகாப்பு அவசியம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலக அளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 70 லட்சம் பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்த கரோனா பேரிடர் 2019-ம் ஆண்டு இறுதியில் ஊகானில் தொடங்கி மிகப் பெரிய அளவில் பதட்டத்தையும், மிகப் பெரிய அளவில் பொருள் இழப்பையும், மிகப் பெரிய அளவில் உயிரிழப்பையும் ஏற்படுத்தி, உலக மக்கள் முழுவதும் தொடர்ந்து பதட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நேற்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஒரு செய்தியினை அறிவித்திருக்கிறார். உண்மையில் மகிழ்ச்சி கலந்த செய்தி. உலக மக்களை ஒரு மிகப் பெரிய அளவில் மன நிம்மதி அடையச் செய்யும் செய்தியாக இது இருக்கிறது. 15வது கோவிட் 19 அவசர நிலைக்குழு கூட்டப்பட்டு உலகளாவிய மக்களின் மீது கொண்டிருக்கிற பொது சுகாதார அவசர நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு எனக்கு பரிந்துரைத்து இருக்கிறது என்று டெட்ரோஸ் கூறியிருக்கிறார். அதாவது, அவசர நிலைக்குழு என்பது 15 முறை தொடர்ச்சியாக கூடி இப்போது பொது சுகாதார அவசர நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அறிக்கை தந்திருக்கிறார்கள். அந்த ஆலோசனையை உலக சுகாதார அமைப்பு ஏற்று அதனை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
உலகளாவிய அவசர சுகாதார நிலையை நேற்று முதல் அவர் விடுவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். இது மிகப்பெரிய அளவிலான மனநிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று நானும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியினை பதிவிட்டிருக்கிறேன். இது மகிழ்ச்சி தரக் கூடிய செய்திதான் என்றாலும்கூட, தனி மனித பாதுகாப்பு என்பது தொடர்ச்சியான அவசியம் என்பதை நாம் உணர்வோம்.
ஜப்பான் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு வருவதற்கு முன்னாலே முகக் கவசங்கள் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கரோனா பாதிப்பு இன்னமும் தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் அவசர கால நிலை பொது சுகாதாரத் துறையில் அவசர நிலைக்கு மட்டுமே இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவில் தொடர்ச்சியாக பீட்டா, டெல்டா, காமா, கப்பா, ஒமைக்ரான் என்று பல வகைகளில் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடைசியாக நமக்கு வந்த பாதிப்பு XBB1.66 அந்த பாதிப்பும்கூட 500-ஐ தாண்டியிருந்த பாதிப்பு நேற்றைக்கு 200-க்கும் கீழே வந்துவிட்டது. எனவே இதைத்தாண்டி இன்னொரு புதிய பாதிப்பு வருமா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் தனி மனித பாதுகாப்பு அவசியம்.
எனவே, பொது இடங்களில் பெரிய அளவில் கூடும்போது முகக் கவசங்கள் அணிவதை தனி மனித இடைவெளியை கடைபிடிப்பதை, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிக் கொள்வதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இத்துறையின் வேண்டுகோள்” என்று அவர் கூறினார்.