வாஷிங்டன்,
உலகிலேயே முதன் முறையாக, தாயின் கர்ப்பப் பையில் இருக்கும் குழந்தைக்கு, மூளையில் அறுவை சிகிச்சை செய்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள லுாசியானாவைச் சேர்ந்தவர், டெரெக். இவரது மனைவி கென்யாட்டா கோல்மன். இவர், கர்ப்பமாக இருந்தபோது வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கர்ப்பப் பையில் உள்ள குழந்தையின் மூளையில் இருந்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதை சரி செய்யவில்லை என்றால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால், குழந்தையை காப்பாற்றி விடலாம் என டெரெக் – கென்யாட்டா தம்பதியிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. 34 வார கருவில் இருக்கும் குழந்தை அசையாமல் இருக்க, ஊசி போடப்பட்டது. மேலும் தாய்க்கு வலி தெரியக்கூடாது என்பதற்காக வலி நிவாரண ஊசியும் போடப்பட்டது.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:
தாயின் வயிற்றில் துளை போடப்பட்டு, அதன் வழியாக செலுத்தப்பட்ட குழாயிலிருந்த உலோகச் சுருள்கள், ரத்த ஓட்டத்தை சரி செய்தன. பின் மூளையில் உள்ள பிரச்னைக்குரிய பகுதிகள் அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தை பிறக்கும் போது மற்ற குழந்தை போல் இயல்பாக இருக்கும். குழந்தைக்கு எந்தவிதமான பிரச்னையும் இருக்காது.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின், கென்யாட்டாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement