கவின் படத்துக்கு டைட்டிலை விட்டுக்கொடுத்த மிஷ்கின்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான டாடா திரைப்படம் ஒரு பீல் குட் படமாக ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து அந்த படத்தில் நாயகனாக நடித்த பிக் பாஸ் புகழ் கவினுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் தேடி வருகின்றன. அந்த வகையில் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் முதன்முறையாக டைரக்சனில் அடி எடுத்து வைக்கும் படத்தில் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அயோத்தி புகழ் பிரீத்தி அஸ்ராணி நடிக்க உள்ளார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்தாலும் ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின் அந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்தாராம். இதை கேள்விப்பட்டதும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தக் கதைக்கு பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்பதால் பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்து விட்டாராம் இயக்குனர் மிஷ்கின்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக சொல்லப்பட்டு சமீபத்தில் அவர் விலகியதாகவும் செய்தி வெளியான நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக கூட சொல்லப்பட்டது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் இதை மறுத்துள்ளதுடன் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என்கிற தகவலையும் அவர்கள் கூறியுள்ளனர்.