லாகூர்: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் பாகிஸ்தானின் லாகூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபை தனியாக பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் காலிஸ்தான் கமாண்டோ படை 1987-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை இந்தியா தடை செய்துள்ளது. இதன் தலைவராக 1989 முதல் இருந்து வரும் பஞ்ச்வார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பஞ்சாபின் தரண் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்வார் கிராமத்தைச் சேர்ந்த இவர், பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி, அந்நாட்டு அரசின் ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு போதைப் பொருட்களை கடத்துவது, ஆயுதங்களை கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் மறுத்து வந்தது.
இந்நிலையில், பரம்ஜித் சிங் பஞ்ச்வார் லாகூரில் இன்று காலை அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று காலை 6 மணி அளவில் லாகூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே தனது பாதுகாவலருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பஞ்ச்வாரை சுட்டுக்கொன்றுள்ளனர். அவரது பாதுகாவலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பஞ்சாப் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.