சென்னை: தமிழ்நாடு காவல் துறையில் 621 எஸ்ஐ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) 2023-ம் ஆண்டு காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பட்டதாரிகள், இணையம் வழியாக ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிகளுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும், சரியான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆண்களுக்கு 469 காலிப் பணியிடங்களும், பெண்களுக்கு 152 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 621 பணி யிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் காவல் துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந்துள்ள வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு தலா 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 15 சதவீதமும், அருந்ததியர் வகுப்பினருக்கு 3 சதவீதமும்,பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் என ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு ஏற்ப வயது உச்ச வரம்புமாறுபடும். மேலும் விவரங்களை தேர்வு வாரியத்தின் tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் எனத் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.