புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய பாரமுல்லா சிறப்பு காவல் கண்காணிப்பாளர் அமோத் அஷோக் நாக்ப்யூர், பாரமுல்லாவின் கர்ஹாமா கன்சர் பகுதியில் பயங்கரவாதி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதி எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். நாங்கள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டோம். இதில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அந்த பயங்கரவாதி கொல்லப்பட்டார். ஸ்ரீநகரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு நாங்கள் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். அதற்கு அச்சறுத்தலாக இருப்பவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமீபத்தில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் குப்வாராவில் சமீபத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜி20 மாநாடு ஸ்ரீநகரில் வரும் 22ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.