டெல்லி:
ரயில் டிக்கெட் பரிசோதகர்களின் (TTE) உடலில் விரைவில் கேமரா பொருத்தும் அதிரடி திட்டத்தை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. டிக்கெட் பரிசோதகர்கள் சிலர் அநாகரீகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து, இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது.
ரயில்களில் சமீபகாலமாக டிக்கெட் பரிசோதகர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சில டிக்கெட் பரிசோதகர்கள் அநாகரீகமான செயல்களிலும் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. உதாரணமாக கடந்த மார்ச் மாதம் கூட ஒரு சம்பவம் நடைபெற்றது.
பஞ்சாப் சம்பவம்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் அமிர்தசரஸை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது முன்னா குமார் (37) என்ற டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்த்தபடி வந்து கொண்டிருந்தார்.
பெண் பயணி மீது சிறுநீர்:
இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால், ரமேஷும், அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனர். மின் விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த முன்னா குமார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை., திடீரென ரமேஷின் மனைவி மீது சிறுநீர் கழிக்க தொடங்கினார். இதனால் திடுக்கிட்டு முழித்த அப்பெண் கூச்சலிடவே, அவரது கணவரும், மற்ற பயணிகளும் சேர்ந்து முன்னா குமாரை நையப்புடைத்தனர்.
தமிழகத்திலும்..
மேலும், இதுதொடர்பான புகாரின் பேரில் முன்னா குமார் கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார். இதேபோல், தமிழகத்திலும் பயணிகளிடம் அநாகரீகமான வார்த்தைகளை பேசியதாக ஒரு ரயில் டிக்கெட் பரிசோதகர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுபோல் தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகர்களிடம் கேட்டால், தங்கள் மீது தவறு இல்லை எனக் கூறுகின்றனர்.
உடலில் கேமரா பொருத்தம்:
எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காகவும், அப்படி ஏதேனும் சம்பவம் நடந்தால், யார் மீது தவறு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவும் ரயில் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த கேமராவின் விலை ரூ. ஆயிரம் ஆகும். இதில் 20 மணிநேரத்துக்கு வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக, இந்த திட்டம் மும்பையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.