லண்டன்-உலக நாடுகளை மூன்று ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சுகாதார அவசரநிலை அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பு திரும்பப் பெற்றது. அதே நேரத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்கிறது என எச்சரித்துள்ளது.
கடந்த ௨௦௧௯ இறுதியில், நம் அண்டை நாடான சீனாவில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு தென்பட்டது.
பொருளாதார பாதிப்பு
இது மிக வேகமாக உலக நாடுகள் முழுதும் பரவியது. இதையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை, சர்வதேச சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு, ௨௦௨௦ ஜன., ௩௦ல் அறிவித்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் இதுவரை, ௬௯ லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் பெரும் பொருளாதார பாதிப்பையும் இது ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழு கூட்டம், கடந்த ௪ம் தேதி நடந்தது. இதில், சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவிப்பை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இது குறித்த அறிவிப்பை, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் வெளியிட்டார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவல், கடந்த மூன்று ஆண்டுகளில் உலகெங்கும் பெரும் மாற்றத்தை, பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.
![]() |
இந்த உலகம், பெரும் சுகாதார அச்சுறுத்தல் நிலையில் இருந்து மீண்டுள்ளது. கொரோனா வைரஸ், சர்வதேச சுகாதார அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளது. அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது.
அச்சுறுத்தல்
அதே நேரத்தில், கொரோனா வைரஸ் பரவல் ஒரு அச்சுறுத்தலாக தொடர்ந்து இருக்கும். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு நாம் திரும்பினால், ஒரு நல்ல பாடத்தை நாம் கற்கவில்லை என்பதாகிவிடும். எனவே, நாம் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்