சென்னை அடுத்த சூளைமேட்டில் உள்ள வாடகை வீட்டில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி மருத்துவமனையில் செவிலியராக இருக்கும் தன் தாயுடன் வசித்து வரும் நிலையில் கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடிக்கக்கோரி அவரது தாய் அமிஞ்சிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் காணாமல் போன 19 வயது கல்லூரி மாணவி சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது முகம் மற்றும் அந்தரங்க பாகங்களில் காயங்களுடன் இருந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். மேலும் அந்த பெண்ணின் உடலில் இருந்து சென்னை பெங்களூரு பயணச்சீட்டை கைப்பற்றியுள்ளனர்.
பூட்டப்பட்ட பேருந்தில் பெண்களின் உடல் இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். கல்லூரி மாணவி சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மாதவரம் போலீசார் அளித்த தகவலின் பேரில் அமிஞ்சிக்கரை போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் பெண் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு தற்பொழுது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாதவரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.