சோழ மண்டலம் எம்எஸ் இன்சூரன்ஸ் நிறுவனமானது, முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சூய் சுமிடோமா இன்சூரன்ஸ் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருவாய், 2022-23 நிதி ஆண்டில் ரூ.264 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் இது ரூ.106 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.2,160 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழா எம்எஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பிரிமீயம் 2022-23 நிதி ஆண்டில் ரூ.6,200 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.6 சதவிகித வளர்ச்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து, சோழா எம்.எஸ். நிர்வாக இயக்குநர் வி.சூர்யநாராயணன் கூறுகையில், “இந்த வளர்ச்சியால் பாலிசிதாரர்கள், வணிகப் பங்குதாரர்கள், மறுகாப்பீட்டாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ந்து நம்பிக்கையும், ஆதரவை அளித்து வருவதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சோழா எம்.எஸ் 2023-24 நிதியாண்டில், தற்போதைய சந்தை பங்கான 2.87 சதவிகிதத்தை விடத் தொடர்ந்து முன்னேறும்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பயிர்க்காப்பீடு துறையிலும் மீண்டும் கால் பதித்துள்ளோம். நெல் மற்றும் கோதுமை பயிர்களுக்கான காப்பீடு சேவையை வழங்குகிறோம். இந்தச் சேவையை என்பது மாநில அரசின் மூலம் செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகளுக்கான காப்பீடு சேவையில் வருங்காலங்களில் முன்னணியில் இருப்போம்.
டிஜிட்டல் சலுகைகளின் செயல்பாடுகளை வலுப்படுத்திட இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
மோட்டார் காப்பீடு 5.3 சதவிகிதமும், தனிநபர் விபத்துப் பிரிவில் 4.9 சதவிகிதமும் பங்களிப்புச் செய்து வருகிறோம். இதன் மூலம் இந்த நிறுவனத்தின் வணிகப்பிரிவு 33 சதவிகிதமும் வளர்ந்துள்ளது. அரசுக்கு சொந்தமான வங்கிகள், தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளுடன் வலுவான செயல்பாட்டில் உள்ளோம்.
26 மாநிலங்களில் 600-க்கும் மேற்பட்ட தொடர்பு மையங்கள் மூலம், 3.4 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்து வருகிறோம். சமீபத்தில் சோழா எம்.எஸ். மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்களின் அனைத்து காப்பீடு மற்றும் ஆரோக்கியத் தேவைகளையும் பூர்த்திச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், மோட்டார் வாகன இழப்பீடுகளில் செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence) பயன்படுத்துவதன் மூலம், மோட்டார் சேத மதிப்பீடு மற்றும் எளிதான இழப்பீடு தீர்வுக்கான SAHAI செயலியை பயன்படுத்துகிறது. இதன் மூலம் 94 சதவிகிதம் மோட்டார் வாகன இழப்பீடுகள் விரைவாக எந்தவித சிக்கலுமின்றித் தீர்வு காண்டுள்ளோம். வருங்காலங்களில் காப்பீடு துறையில் செயற்கை நுண்ணறிவு சாதனைப் படைக்கும்’’ என்று தெரிவித்தார்.