தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாண்டவர்மங்கலத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டு இருந்த கட்டட தொழிலாளி சக்திவேல் மீது மது பாட்டில் மற்றும் சேர்களை வீசி 4 பேர் கொண்ட கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தாக்குதல் நடத்திய அதே கும்பல் பின் தொடர்ந்து வந்து மிரட்டிய நிலையில் அவர்களைப் பிடிக்க முயன்ற காவல் துறையினரையும் அரிவாளைக் கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் புகைப்படங்களை சிலர் அவமரியாதை செய்ததாகக் கூறி சக்திவேல் மற்றும் சிலர் போராட்டம் செய்தனர். இதன் காரணமாக சக்திவேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. தூத்துக்குடியில் விஏஓ வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது காவல்துறையினருக்கு அறிவளை காட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.