ஹைதராபாத்:
ரீல்ஸ், செல்பி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ஹைதராபாத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் சோகத்தையும், அதே சமயத்தில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானது என்று கூறினாலும், அது சமூகத்தில் எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை ஸ்மார்ட்போன்கள் தான் சீரழித்துக் கொண்டிருக்கின்றன ன்று சொன்னால் அது மிகையாகாது.
பேஸ்புக், இன்ஸ்டாவில் கிடைக்கும் லைக்குகள் தான் உலகம் என நினைத்துக் கொண்டு அவர்கள் பல ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றன. இது சில நேரங்களில் அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகிறது. அப்படியொரு சம்பவம்தான் ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது.
16 வயது சிறுவன்:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரைச் சேர்ந்தவர் முகமது சர்பராஸ். 16 வயது ஆகிறது. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாவில் போடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முகமது சர்பராஸ். இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள மசூதிக்கு சென்று தொழுகை செய்திருக்கிறார் சர்பராஸ்.
ரீல்ஸ் மோகம்:
அதன் பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து பல இடங்களுக்கு பைக்கிள் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ரயில்வே டிராக் அருகே அவர்கள் சென்றிருக்கின்றனர். ரயில்கள் அங்கு செல்வதை பார்த்ததும் அதற்கு அருகே நின்று கெத்தாக ரீல்ஸ் செய்தால் என்ன என்று சர்பராஸுக்கு தோன்றி இருக்கிறது. இதையடுத்து, தனது நண்பர்களிடம் இதை அவர் கூற, அவர்களும் சூப்பர் டா மச்சான் என்ற ரீதியில் உசுப்பேற்றி இருக்கின்றனர்.
தண்டவாளம் அருகே..
இதனைத் தொடர்ந்து, தண்டவளாளத்துக்கு அருகே சர்பராஸ் சென்றிருக்கிறார். ரயில் வேகமாக வரும் போது, அதற்கு மிக அருகில் நடந்து வருவதை போன்ற ரீல்ஸ் வீடியோ செய்வதுதான் அவர்களின் ப்ளானாக இருந்திருக்கிறது. அதன்படி, அங்கு ஒரு எக்ஸ்பிரஸ் அதிவேகமாக வந்து கொண்டிருக்க, முகமது சர்பராஸ் தண்டவாளத்தின் அருகே நடக்க ஆரம்பித்தார்.
தூக்கி வீசிய ரயில்..
ஆனால், எதிர்பாராதவிதமாக ரயில் இன்ஜினுக்கு பக்கவாட்டில் இருந்த கம்பி ஒன்று சர்பராஸின் முதுகில் மோதியது. ரயில் மோதிய வேகத்தில் சர்பராஸின் கை, கால்கள் தனித்தனியாக பறந்தன. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்நிகழ்வு குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.