
தாத்தா, அப்பா போல தமிழில் தடம் பதிப்பாரா நாக சைதன்யா
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாக்களின் தலைநகராக சென்னை விளங்கியது. சென்னையில்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்கள் உருவாகின. அவற்றில் தமிழ்ப் படங்களில் அதிகமான தெலுங்கு நடிகர்கள், நடிகைகள் நடித்தனர். அவர்களது ஆதிக்கம் அப்போது அதிகமாகவே இருந்தது.
என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ், எஸ்வி ரங்கா ராவ், நாகையா, சாவித்ரி, பானுமதி, காஞ்சனா, கண்ணாம்பா, ஜமுனா, வாணிஸ்ரீ, அஞ்சலிதேவி என சொல்லிக் கொண்டே போகலாம். அவர்களில் நாகேஸ்வரராவ் “மாயமலை' என்ற படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 'ஓர் இரவு, பூங்கோதை, தேவதாஸ், மாதர்குல மாணிக்கம், எங்கள் வீட்டு மகாலட்சுமி, மனிதன் மாறவில்லை' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவற்றில் 'தேவதாஸ்' படம் இப்போது வரைக்கும் பேசப்படும் ஒரு காதல் படமாக இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக உயர்ந்து கொண்டிருந்த போதும் தமிழிலும் நடித்து வந்தார்.
அவருடைய மகன் நாகார்ஜுனா, நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாவதற்கு முன்பே 'உதயம், இதயத்தைத் திருடாதே' ஆகிய டப்பிங் படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகே 'ரட்சகன்' என்ற படத்தில் நேரடியாகத் தமிழில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு 'தோழா' படத்தில் நடித்தார். சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும் நாகார்ஜுனாவுக்கு தமிழில் அந்தக் காலத்தில் தனி ரசிகர் கூட்டம் இருந்தது.
நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும் சென்னையில் தான் பள்ளிப் படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பிற்காக மட்டும் ஐதராபாத் சென்றார். பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.
தெலுங்கில் நடித்து இத்தனை வருடங்களுக்குப் பிறகே நேரடித் தமிழ்ப் படத்தில் அறிமுகமாக உள்ளார். வரும் மே 12ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ள 'கஸ்டடி' படம் வெளியாக உள்ளது. இப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். தாத்தா, அப்பா போல அவரும் தடம் பதிப்பாரா என்பது ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.