சென்னை: ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஹிந்தி திரைப்பட இயக்குனராக இருப்பவர் சுதிப்தோ சென். இவரது கதை எழுதி இயக்கி இருக்கும் படம் ‛தி கேரளா ஸ்டோரி’. இந்த திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான டீசர் வெளியான நிலையில் கேரளா உள்பட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் இந்த திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
கேரளா பற்றி தவறான கருத்தை பரப்பும் நோக்கத்தில் போலியான தகவல்களுடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார். மேலும் இதன் பின்னணியில் சங்பரிவார்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் தான் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசானது.
‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் திரைப்படம் திரையிடப்பட்டால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. இதற்கிடையே தான் டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்களுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.
அதாவது ‛தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். திரைப்படம் பார்க்க வருபவர்களை முறையாக சோதனை நடத்த வேண்டும். அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து தமிழ்நாட்டில் நேற்று ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியான திரையரங்குகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் சில இடங்களில் போராட்டம் நடந்தது.
இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் தியேட்டர் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று சென்னை உள்பட சில இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடந்த போராட்டத்தில் சீமான் பங்கேற்று மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி சீமான் பேசுகையில், ‛‛கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான தி கேரளா ஸ்டோரி படத்தை பிரதமரே ஆதரிப்பது வேதனையாக உள்ளது. பாஜக கருத்துகள் கொண்ட படங்கள் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொன்றாக வெளிவர தொடங்குகிறது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைக்குரிய படங்கள் வெளியிடப்படுகின்றன. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை பாஜகவினர் உருவாக்க முயற்சிக்கின்றனர். மதம் இருந்தால் போதும் என பாஜக நினைக்கிறது. கர்நாடகா தேர்தலுக்காக ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரிலீசாகி உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக ‛திப்பு’ என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது” என்றார்.