டூ பிரதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம்ஸ் (TBOF) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், புனேவின் போதானியை தளமாக கொண்டு இயங்கி வரும் இயற்கை மற்றும் இயற்கை விவசாய பொருள்கள் உற்பத்தி நிறுவனம். சத்யஜித் ஹங்கே மற்றும் அஜிங்க்யா ஹங்கே ஆகிய இரு சகோதரர்களால் இந்நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம், 14.5 கோடி ரூபாயை நிதியாக திரட்டியுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோரும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மேலும் தேஜேஷ் சிட்லங்கி, துர்கா தேவி வாக், ஜாவேத் டாபியா ஆகிய பிரபலங்களும் இதில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதியை வைத்து TBOF நிறுவனம் தங்களின் உற்பத்தி திறனை விரிப்படுத்தவும், உழவர் பயிற்சி மையங்களை கட்டவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகத்தை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த நிதி விவசாயிகளை மேம்படுத்தவும் கிராமங்களில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என நிறுவனம் தரப்பில் கூறபட்டுள்ளது.
“அனைவருக்கும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான எதிர்க்காலத்தை நோக்கிய TBOF – ன் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இயற்கை வேளாண்மை மூலம் கிராமப்புற மக்களை மேம்படுத்துவதற்கான TBOF -ன் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பை நான் நம்புகிறேன்” என நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
“இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள விவசாயிகள் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் இந்நிறுவனம் கொண்டு வந்த நேர்மறையான தாக்கத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
TBOF பலவிதமான நெய், தினை, ஆரோக்கியமான தானிய மாவுகள், செக்கு எண்ணெய்கள் மற்றும் நட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான கரிம மற்றும் இயற்கை மூலப்பொருள் சார்ந்த தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை நடைமுறை படுத்துகிறது.
TBOF ஆயிரக்கணக்கான குடும்பங்களுடன் இணைந்துள்ளது. 53-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுகர்வோரைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் அதன் அதிகாரப்பூர்வ இ-காமர்ஸ் வலைதளம், மொபைல் பயன்பாடு, முன்னணி ஈ-காமர்ஸ் தளங்கள் மற்றும் முக்கிய உணவு கடைகள் உள்ளன.