புதுக்கோட்டையைச் சேர்ந்த, பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ். இவர், பசங்க, வம்சம் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது, சென்னையில் வசித்து வரும் பாண்டிராஜ், அவ்வப்போது, புதுக்கோட்டைக்கு வந்து சென்றுள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பே, நில புரோக்கராக பாண்டியராஜிடம், புதுக்கோட்டை, பூங்கா நகரைச் சேர்ந்த குமார்(49) என்பவர், அறிமுகமாகியிருக்கிறார்.
அப்போது குமார், சிப்காட் பகுதியில், விற்பனைக்கு நிலம் இருப்பதாகவும், அதனை வாங்கித் தருவதாகக் கூறி, பாண்டியராஜிடம் இரண்டு தவணைகளில் ரூ. 40 லட்சம் வரையிலும் பணம் வாங்கியிருக்கிறார். அந்த இடம், தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பது அதன் பிறகு தான், பாண்டியராஜுக்கு தெரியவந்திருக்கிறது.
இதற்கிடையே, பாண்டியராஜ், குமாரை தன்னுடைய படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார். இதேபோல், டி.வி.எஸ்.கார்னர் பகுதியில், வீட்டு மனை இருப்பதாகக் கூறி, இந்த முறை எந்த சிக்கலுமின்றி, அதுவும் குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன் என்று குமார், பாண்டியராஜிடம் மீண்டும் ரூ.1 கோடி வரையிலும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கிடையே, அவ்வப்போது கடனாகவும், பணம் வாங்கியிருக்கிறார். மொத்தமாக ரூ.1,89,50,000 பணத்தை குமாரிடம் பாண்டியராஜ் கொடுத்திருக்கிறார்.
டி.வி.எஸ்.கார்னர் இடமும், வேறு ஒருவர் பெயரில் இருப்பது பாண்டியராஜிற்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த, பாண்டியராஜ், குமாரிடம் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பணத்தைக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் இயக்குநர் பாண்டிராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன், 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
குமார், மோசடியில் ஈடுபட்டது, உறுதி செய்யப்பட்ட நிலையில், குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டையில், நிலம் வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பிரபல இயக்குநர் ஏமாற்றப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.