பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதாக பாட்னா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது. தலைமை நீதிபதி கே.வி. சந்திரன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி பிஹார் அரசு தரப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அட்வகேட் ஜெனரல் பி.கே. ஷஹி, “இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். வழக்கை ஜூலை 3ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனினும், விரைவாக விசாரிக்க நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இனி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாட்னா உயர்நீதிமன்றம், வழக்கு வரும் 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.