புதுடெல்லி: போலியான இரட்டை எஞ்சின் வாக்குறுதி குறித்து கர்நாடக வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மணிப்பூரில் ‘இரட்டை எந்திர அரசு’ ஆட்சியின் விளைவுகளைப் பாருங்கள். இரண்டு எந்திரங்களும் தோல்வியடைந்து விட்டன. மாநில அரசு உட்கட்சி பூசல்களால் பிளவுப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசிடம் மகிழ்ச்சியான தீர்வுகள் உள்ளன. அதன் விளைவாக மேதே மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாகியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒற்றுமையாக அமைதியான பாதையில் பயணித்த சமூகங்கள் இப்போது போராட்டப் பாதைக்கு திரும்பியுள்ளன. இதனால் கர்நாடக வாக்காளர்கள் போலியான ‘இரட்டை எந்திர அரசு’ வாக்குறுதி குறித்து கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ‘இரட்டை எந்திர அரசு’ என்பது மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி என்பதை குறிப்பதற்காக அக்கட்சியின் தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. கர்நாடகாவில் உள்ள 244 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடக்க இருக்கிறது.