தலையில் அடிப்பட்டு வந்த சிறுவனுக்கு தையல் போடாமல் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 5 ரூபாய் ஃபெவிக்விக் பேஸ்ட்டை ஒட்டிய தனியார் மருத்துவமனையின் சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசூகூரைச் சேர்ந்த தம்பதி வம்சிகிருஷ்ணா மற்றும் சுனிதா. இவர்கள் தெலுங்கானா மாநிலம் அய்சாவில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுள்ளனர். அப்போது வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியின் ஏழு வயது மகன் வெளியில் விளையாடி கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது.
சிறுவனின் இடது கண்ணுக்கு மேல் ஆழமான காயம் ஏற்பட்டதால், தையல் போட வேண்டியிருந்தது. இதனால் பெற்றோர் உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்குதான் அதிர்ச்சி தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு தையல் போடாமல் பொருட்களுக்கு ஒட்ட பயன்படும் ஃபெவிக்விக்கை தடவியுள்ளனர்.
இதை கண்டு அதிர்ந்து போன சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வடிவேலு காமெடி ஒன்றில் சில்லறை இல்லாததால் இன்னொரு நல்ல பல்லையும் பிடுங்கும் காட்சி சிரிக்கும்படியாக இருக்கும். அதுபோன்றெல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்ற ஆச்சரியம் அனைவரிடமும் உள்ளது. அந்த வகையில் தையலுக்கு பதிலாக 5 ரூபாய் ஃபெவிக்விக்கை தடவிய மருத்துவ நிர்வாகத்தில் செயல் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் காட்டுவார்கள் என்பதால்தான் பலரும் பணம் செலவானாலும் பரவாயில்லை என்று தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும், குழந்தைகள் என்றால் கூலி தொழிலாளிகூட தனது பிள்ளையை கடன்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இவ்வாறு தனியார் மருத்துவமனை மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தையலுக்கு பதிலாக ஃபெவிக்விக் பயன்படுத்திய தனியார் மருத்துவமனையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.