மதுரை எம்பி: ‘வெற்றி.. வெற்றி’.. ஒன்னுதான் இருக்கு அதையும் மாத்துனா எப்படி.?

வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதை தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி வெளியிட்ட அறிக்கை: ‘‘தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையத்தை மயிலாடுதுறையில் இருந்து மாற்றி மாணவிகளை வாரணாசி வரை அலைய விடுகிற வகையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் நான் 11.04.2023 அன்று வலியுறுத்தி இருந்தேன்.

மயிலாடுதுறை பயிற்சி மையத்திற்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து மயிலாடுதுறைக்கே போய் பள்ளிக் கல்வியை அதிலும் குறிப்பாக மேல்நிலைக்கல்வி முதலாண்டு பயின்று வந்த மாணவிகள் எல்லாம் அதிர்ந்து போய் இருந்தனர். உபியில் உள்ள வாரணாசிக்கோ சட்டிஷ்கரின் ராஜ்நன்த்கன் நகருக்கோ செல்லவேண்டும் என்ற உத்தரவு கண்டு திகைத்துப்போயிருந்தனர். விளையாட்டு ஆர்வமும், கல்வியும் ஒரு சேர கேள்வியாகிற நிலை ஏற்பட்டது.

குக்கிராமத்தில் பிறந்து இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக வந்த புஷ்பா பயிற்சி பெற்ற மயிலாடுதுறை மையத்திற்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசின் விளையாட்டு துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து இப்பிரச்சனை குறித்து தலையீடு செய்தேன்.

வரும் 7 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் மாபெரும் போராட்டம் நடைபெற இருந்தது. நான் உள்பட இயக்கத்தோழர்கள் பலரும் அதில் பங்கெடுப்பதாக இருந்தது. இந்நிலையில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் No 518/SAI/OPS/STC Review/ 2022 -23/ 03.05.2022 அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 11 பயிற்சி இடங்களும் ஒன்று கூட குறையாமல் தரப்பட்டுள்ளது. எனது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த ஒன்றிய அமைச்சருக்கு நன்றி. போராடிப்பெற்ற இந்த வெற்றியை தமிழ்நாட்டின் கூடைப்பந்து வீராங்கனைகளுக்கு அர்ப்பணிப்போம்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.