கடந்த மாதம் 23-ந் தேதி மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் தொடங்கியது. கடந்த 1-ந் தேதி அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது.
தொடர்ந்து 2-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த 12 நாள் சித்திரை திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.
அழகர் கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக மதுரைக்கு புறப்பட்டவருக்கு, வித விதமான ஆயுதங்கள் செறிந்த கள்ளழகர் திருக்கோலம் அணிவிக்கப்பட்டு, கண்டாங்கி புடவை கட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகருக்கு எதிர்சேவை அளித்து வரவேற்றனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி பெண்கள் அழகருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். அதனை பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவுக்கு வந்திருந்த 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.