மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டப்பட இருக்கிறார். கூடவே, அவரது மனைவியான கமீலாவுக்கும் இன்று முடிசூட்டுவிழா. இந்நிலையில், நடைபெற இருக்கும் முடிசூட்டிவிழா தொடர்பிலான 10 சுவாரஸ்ய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
1. 1937ஆம் ஆண்டுக்குப் பிறகு, மன்னராக முடிசூட்டப்படும் முதல் நபர் மூன்றாம் சார்லஸ் ஆவார்.
2. பொதுவாக மன்னர் அல்லது மகாராணியாரின் முடிசூட்டுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல்லாயிரக்கணக்கில் விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். மறைந்த எலிசபெத் மகாராணியாரின் முடிசூட்டுவிழாவிற்கு 8,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், மன்னர் சார்லஸ் தன் முடிசூட்டுவிழாவிற்கு 2,000 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்.
3. மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் முடிசூட்டுவிழாவிற்கென ஆயத்தம் செய்யப்பட்டுள்ள ஆறு குதிரைகள் பூட்டப்பட்ட இரதத்தில், பாதுகாவலர்கள் சூழ, முடிசூட்டுவிழா நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
4. சார்லஸ், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், 360 ஆண்டு கால பழமையான புனித எட்வர்ட் கிரீடத்தை அணிந்து, 14ஆம் நூற்றாண்டு சிம்மாசனத்தில் அமரும் அதிக வயதுடைய பிரித்தானிய மன்னர் ஆவார்.
5. மன்னருடைய முடிசூட்டுவிழா என்பது ஒரு கிறிஸ்தவ முறையிலான நிகழ்ச்சி என்றாலும், மற்ற மத நம்பிக்கைகளையுடைய அமைப்புகளின் தலைவர்களும் மன்னரை வாழ்த்துவதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
6. பிரித்தானிய பிரதமரான ரிஷி சுனக், மத நம்பிக்கைபடி இந்துவாக இருந்தாலும், பிரித்தானிய அரசின் தலைவர் என்ற முறையில் மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவம் நிகழ இருக்கிறது.
7. மறைந்த மகாராணியாரின் முடிசூட்டுவிழாவை ஒப்பிடும்போது, மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெறப்போவதில்லை. ஆனாலும், அந்த நிகழ்வு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட வாட்கள், உலகின் மிகப்பெரிய வைரம் பதிக்கப்பட்ட செங்கோல் என பார்வையாளர்களைக் கவரும் வகையில் கண்கொள்ளாக் காட்சியாகத்தான் அமையப்போகிறது.
8. மன்னருடைய முடிசூட்டுவிழாவில் இளவரசர்கள் ஹரியும் ஆண்ட்ரூவும் கலந்துகொள்வார்களா என கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் இருவருமே முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு விழாவில் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
9. முடிசூட்டுவிழா நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் ரதத்தில் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்கள். அவர்களுக்குப் பின்னால் ராஜ குடும்ப உறுப்பினர்களும், சுமார் 4,000 பிரித்தானிய மற்றும் காமல்வெல்த் படையினரும் அணிவகுத்துவருவார்கள்.
10. பக்கிங்காம் அரண்மனைக்குத் திரும்பியபின், மன்னரும் ராணியும், மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களுடன், பாரம்பரியப்படி பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் மக்கள் முன் தோன்றுவார்கள். அப்போது, விமானப்படையின் விமானங்கள் வானில் பறந்து மன்னருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும் நடைபெறும்.