இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 200 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையிலும் கூட, இலங்கையின் மலையகம் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் பாரிய அளவில் பாதிக்கப்படுபவர்களாக மலையகப் பெண்கள் காணப்படுகின்றனர்.
“ஒரு பெண்ணின் வலிமை அவளது தசைகளில் இல்லை…. அவளுடைய மனதிலும் உள்ளத்திலும் உள்ளது” என்று கூறுவார்கள். அதுபோன்று எமது மலையக பெண்கள் வலிமையுள்ளவர்கள். ஆனால் களங்கள் அமையவில்லை. சாதிக்கக் கூடியவர்கள் ஆனால் வழிகாட்டப்படவில்லை…
குறித்த மலையக பெண்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையில் சமூக, பொருளாதார, உடல் உள மற்றும் பால்நிலை சார்ந்த பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக அவர்கள் பால்நிலை சார்ந்த சவால்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுவதில்லை என்பதுடன், மலையகப் பெண்களுக்குச் சொல்லமுடியாத வலிகளும் சவால்களும் இருக்கின்றன.
பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு
மலையக பெண்களின் வறுமை நிலையே அவர்களைப் பின்தங்கிய நிலைக்கு இட்டுச் செல்கின்றதென்றால் அது மறுக்கமுடியாத உண்மை.
தேயிலை பெருந் தோட்டங்களில் பணிக்குச் செல்லும் பெண்கள் தனது குடும்பங்களை, குழந்தைகளை ஏன் தான் கொழுந்து பறிக்கும் கூடைகளைக் கூட வாழ் நாள் முழுவதும் சுமந்து செல்கின்றனர்.
உழைப்பைத்தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. வாழ்வாதாரத்தின் மூல ஊற்றாக தினக் கூலிமுறை. தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறை, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும் நிலை, கல்வி கற்ற சமூகம் தோன்றவில்லை.
மேலும், தேயிலைத் தோட்ட பணியின்போது, இரத்தத்தை உரிந்து குடிக்கும் அட்டைகள், பாம்பு மற்றும் குளவி கொட்டில் மரணிக்கும் அவலங்கள்… எத்தனை பிரச்சினை.. அத்தனையும் தாங்குவாள் மலையாள்.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு
பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிலாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிப்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும்.
எந்தவொரு வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும், பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்து நிற்பதற்குக் காரண கர்த்தாக்களாக விளங்குபவர்கள் மலையகப் பெண்கள் என்றால் அது மிகையில்லை. ஆனால், இவர்களது வாழ்க்கையோ முட்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது.
இத்தனையும் தாண்டி இன்றும் 1000 ரூபாய் சப்பளத்துக்காக இம்மக்கள் போராடி வருகின்றனர்.
ஓய்வற்ற நீண்ட வேலைநேர கடினமான உழைப்பும், வாழ்ந்து காட்டவேண்டும் என்ற இறுமாப்பும் மலையகப் பெண்களின் ஊதியத்தையும் தாண்டி மிகப் பெரும் சவாலுடன் வீறுநடை போட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் ஆராய்ந்து மற்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக அவர்களின் சமூக, பொருளாதார, மன நலம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று ஆராய்ந்து நோக்குவது சல பொருந்தும்.
உலகின் ஏனைய துறைகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பீட்டு பார்க்கும்போது மலையக தோட்டுத்துறையில் பணிபுரியும் பெண்களது வாழ்க்கை, கல்வி போன்ற பல்வேறு விடயங்களில் முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது.
திருப்திகரமானதாக இல்லை
ஆரம்பக் காலங்களை விடச் சமகாலங்களில் ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்குக் காணப்படுகின்றது.
தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெற்றோர்கள் தனது பிள்ளைகளைக் கல்வியில் முன்னேற்றியுள்ளனர் என்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆசிரியர்கள், வைத்தியர்கள் போன்ற பல்வேறு துறைகளில் உருவாக்கியுள்ளனர் சந்தோஷம்.
ஆனாலும், இவர்களது இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நடமாடும் சேவைகள்
தற்போதும் கூட போதிய கல்வியறிவு இல்லாத மலையகப் பெண்கள், தமக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சிலர் தமது வருங்கால சந்ததியினரின் அதாவது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கூட எடுப்பதற்குத் தவறி விடுகின்றனர்.
இதற்குச் சான்றாக, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலையத்தில் இடம்பெற்ற பிறப்பு, இறப்பு, தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவைகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
இதில் இன்னுமொரு துயரம் என்னவென்றால், பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாத வயோதி பெண்களை அதிக அளவில் காணக்கூடியதாக இருந்தது.
அதனால் சிலர் தமது ஓய்வூதியத்தைக்கூடப் பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அல்லது பெற்றுக் கொள்ளாமலேயே மரணித்தும் போகின்றார்கள். இது ஆண்- பெண் இருபலரையும் சார்ந்த ஒரு விடயமும் கூட. இந்த அவல நிலை இன்றும் மலையகத்தில் மாறவில்லை.
சட்ட விழிப்புணர்வு
காரணம் மலையக மக்களுக்கு அரசின் சட்ட விதிகள் குறித்த தெளிவின்மையே காரணம். இதற்குச் சட்ட விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இதைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. பெண்ணியம் பேசும் அனைவரும் அதற்கு பொறுப்பு கூறவேண்டும்.
முக்கியமாக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இதனைக் கருத்திற்கொண்டு அவர்களின் இந்த நிலைப்பாட்டினை மாற்ற வேண்டும்.
அரசியல் தலைவர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி மலை வாழ் பின்தங்கிய பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உதவுங்கள்… வாக்களித்தவர்களுக்கு நன்றி செலுத்துங்கள்….
லயம் வீட்டுக்காகப் பணி
தமக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கையுடன் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இந்த மலையகப் பெண்களில், நூற்றுக்கு 25 சத வீதமானவர்களே தமது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர்.
இதற்கான காரணம் வறுமை. அத்துடன் விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றைத் தகுந்த நேரத்தில் பெற்றிருக்காதவையாகும். அதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
வறுமை காரணமாகக் கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு பட்டனத்திற்கு பணிக்காகப் புறப்பட்டு வந்து விடுகின்றனர். மேலும் லயம் வீடு வேண்டும் என்றால் வீட்டில் யாராவது ஒருவர் தேயிலைத் தோட்டத்தில் பேணி புரிய வேண்டும் என்ற சூழ்நிலையும் உண்டு. அதற்காக வீட்டிலுள்ள ஒரு பெண் பிள்ளையைத் தேயிலைத் தோட்டத்தில் பணிக்காக அனுப்பி விடுகின்றனர். அவளின் எதிர்காலம் தேயிலைத் தோட்டம் தான்.
அரசியல்வாதிகள் முதலாளிமார்களுக்கு உணர்வுகள் பெரிதல்ல… குறைந்த சம்பளத்தைக் கொடுத்து தொழிலாளர்களை வாட்டி வதைத்து தங்களது வருமான இலக்கை அடைந்து அவர்கள் ராஜ வாழ்வை வாழ்ந்து வருக்னறனர் என்றால் அதுவும் பொய் அல்ல.
ஆண்டாண்டு காலம் இந்த மலையக பெண்களின் நிலமை மாறாது. அதற்காகப் பல மகளிர் அமைப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் பெண் ஆளுமையை விருத்தி செய்து, மலையகப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி அவர்களுக்கு மன ரீதியான தைரியத்தைக் கொடுக்க வேண்டும். அத்துடன் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும்.
பெருந்தோட்ட பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம்
பாலின அடிப்படையில் பெண்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயலையும் வன்முறையாக வரையறுக்கிறது.
அந்த வகையில் மலையக பெண்கள் காலா காலமாகத் துஷ்பிரயோகத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.
குடும்பங்கள் தொடக்கம் பணியிடம் என மனித வதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதோடு பாலியல் ரீதியான சீட்டலுக்கும் பெருமளவிலான மலையக பெண்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
அண்மைக்கால சிறு முன்னேற்றம்
ஆசிய நாடுகள் காலனித்துவப்படுத்தப்பட்ட பொழுது பெண்களின் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாகக் காலனித்துவத்துக்கு முற்பட்ட சமுதாயத்தில் பெண்கள் விவசாய, வீட்டு வேலைகளை மாத்திரமே செய்தனர். ஆனால், அந்தக் காலனித்துவத்துடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
அதன்படி கோப்பி, இறப்பர், தேயிலை மற்றும் ஏனைய தோட்டங்களில் வேலை செய்வதற்குச் சேர்க்கப்பட்டனர். தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு தொழிற்றுறையில் மாற்றம் பெற்ற பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தமது பங்களிப்பை நல்கி பாரிய வளச்சி கண்டுள்ளனர்.
அண்மைக் காலமாக மலையகப் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலையை விட்டு, கல்வியில் ஆர்வம் காட்டுவதும் சுய தொழிலினை செய்வதற்கு வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதும் ஆகும். எனவே அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நவீன உலகில் ஓர் அடிமைப்பட்ட பெண்
ஆண் சமுதாயம் பெண்ணை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில் கூட அப்பெண்கள் சோர்ந்து விடவில்லை. காரணம் அவர்களின் முயற்சி. அதாவது அந்தச் சமயத்தில் கூட விவசாயம், பண்ணைத் தொழில் போன்றவற்றைச் செய்து வந்துள்ளனர்.
கல்வி அறிவற்ற நிலையிலும் கூட பெண்ணியம் பேசப்பட்டது. பெண்ணினம் தமக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கி தமக்கென்று ஒரு வரலாற்றைப் பதிக்கும் அளவிற்கு அவர்களின் முயற்சி இருந்தது. இப்பொழுதும் முயற்சிக்கின்றனர். சாதித்தும் விட்டனர். இன்று மலைய பெண்கள் சரித்திரத்தில் பேசுகின்ற அளவுக்கு முன்னேறியுள்ளனர். கல்வி, பணத்தில் தனது இரத்தம் சிந்திய உழைப்பால்..
பெண்ணியம் பேசும் சர்வதேச அமைப்புக்கள் வழங்கிவரும் சேவைகள் பூரணமாக மலையக பெண்களுக்குச் சேர்வதை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
இல்லையேல் மாறி வரும் நவீன உலகில் ஓர் அடிமைப்பட்ட பெண் சமூகம் இருப்பதனை மாற்ற முடியாமல் போய் விடும்.
அத்துடன் பெண்களின் மகிமையை உழைப்பால் மட்டுமல்லாது பண்பாடு, கல்வி, கலாசாரத்திலும் பேசப்பட வேண்டும் அதுவே மலையகம் மட்டும் அல்ல அனைத்துலக பெண்களின் வெற்றிக்கு வித்தாகும். நிலை மாறவேண்டும்.