முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாநிலத்தில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. மேலும், நமது மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர விளையாட்டுப் பயற்சி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தகுதிவாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல், போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் பொருட்டு மாநிலத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகிய சீர்மிகு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. இது தவிர மாநிலத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவதையும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி 2021-2022 நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டில் மினி ஸ்டேடியங்கள் இல்லாத அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம் தொகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், மதுரை மாவட்டம் சோழவந்தான், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், தூத்தூக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட அயனாவரம் வட்டம், பெரவலூர், ஜம்புலிங்கம் மெயின் ரோடு, பகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடத்தினையும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி மவுன்ட் ரோடு அருகே காயிதேமில்லத் கல்லூரி அருகே உள்ள மதரசா பள்ளி வளாகம் அருகில் உள்ள இடத்தினையும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் எழும்பூர் மேயர் ராதகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்ற புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.
மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியம் சென்னையில் வருகிற ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 13 வரை ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை -2023 போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் புரனமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள திட்டமிடுவதற்கென ஹாக்கி இந்தியா அதிகாரிகள் குழு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் அரசு அதிகாரிகள் குழுவினர் ஒடிசா மாநிலம் ரூர்கேலா மற்றும் கலிங்கா ஆகிய ஹாக்கி மைதானங்களை பார்வையிட்டனர். அதனைத் தொடந்து மேற்கொள்ளபட வேண்டிய பணிகள் திட்டமிடப்பட்டு மைதானத்தை புனரமைத்து மேம்படுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (05.05.2023) மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்ற பணிகளை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநாகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் பலர் உடனிருந்தனர்.