காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் நடந்தது. 15 பேர் கொண்ட இந்த கூட்டத்தை ஒன்றிய சேர்மேன் கருணாநிதி தலைமை தாங்கினார். அப்போது விசிக-வை சேர்ந்த இரண்டாவது வார்டு கவுன்சிலர் தியாகராஜன் ஆதங்கத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தியாகராஜன் பேசுகையில், நான் வெளியே போய்விடுகிறேன்.. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்து இடுகிறேன். இனி எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை.
மக்கள் என்னை நம்பி வெற்றி அடைய வைத்துள்ளார்கள். ஆனால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. உங்கள் சாதி மக்களுக்குத்தான் எல்லாமே செய்கிறீர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேர்மேன் கருணாநிதி எனக்கும், என் வார்டு மக்களுக்கும் எதையுமே செய்யவில்லை. என்னை கேவலமாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று தியாகராஜன் மிகுந்த ஆதங்கத்துடன் கூறினார். மேலும், உங்களை சேர்மேனாக ஆக்கியதற்கு பதிலாக ரவுடி படைப்பை குணாவின் மனைவியை ஆக்கியிருந்தால் எனது வார்டுக்கு ஏதாவது நல்லது செய்திருப்பார் என்று கூற சேர்மேன் கருணாநிதி அங்கிருந்து அமைதியாக புறப்பட்டார்.
ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவரை அவரது கணவர் குணா சிறையில் இருந்துகொண்டே வெற்றி பெற வைக்க திட்டமிட்டாதாகவும் கூறப்படுகிறது. ரவுடி குணா என்கிற படைப்பை குணா மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் எட்டு கொலை வழக்குகள் உட்பட கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்கவுண்டருக்கு பயந்து படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானர். இதைத்தொடர்ந்து கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட படப்பை குணா மீது குண்டாசும் போடப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பாஜக கூட்டத்திற்கு படப்பை குணா தனது ஆதரவாளர்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது . இவருக்கு பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.