லிமா: ஷூக்கடையில் ஒன்றுத்துக்கும் உதவாத வகையில் வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய சம்பவத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் பெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பணம், நகை திருட்டு போய் ரூ 10 மதிப்புள்ள பொருட்களையும் ரிஸ்க் எடுத்து திருடும் கும்பல் இருக்கத்தான் செய்கிறார்கள். மது கடைக்குள் புகுந்து மதுபான பாட்டில்களை திருடும் நபர்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது போல் சில இடங்களில் திருட வந்துவிட்டு டயர்ட்டாகி அங்கேயே படுத்து உறங்கி காலையில் போலீஸிடம் சிக்கிய காமெடி சம்பவங்களும் நடந்ததுண்டு. அது போல் வீடுகளில் திருட வந்துவிட்டு நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்டுவிட்டு பொறுமையாக திருடியும் சென்றுள்ளனர்.
கொடூர திருடர்களுக்கு மத்தியில் காமெடியாக திருட வந்த இடத்தில் எதுவும் இல்லை என்றால் கஷ்டப்பட்டு திருட வந்திருக்கிறேன், எதற்காக ஒன்றுமில்லாமல் வைத்துள்ளீர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அது போல் கோயில் உண்டியலை திருடிவிட்டு, என்னை கண்ணை குத்திவிடாதே கடவுளே என வேண்டுதல் கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இப்படி டிசைன் டிசைனாக திருட்டுகள் நடைபெறும் நிலையில் பெரு நாட்டில் ஒரு வினோத திருட்டு நடந்துள்ளது. அதாவது பெருவில் உள்ள ஷூக்கடைக்குள் பூட்டை உடைத்து 3 திருடர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த ஸ்னீக்கர்ஸ் ஷூக்களை திருடியுள்ளனர். சுமார் 200 ஷூக்களை திருடி கொண்டு அவர்கள் தப்பிவிட்டனர்.
இதையடுத்து காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அங்கு வந்து பார்த்த போது காணாமல் போன ஷூக்களின் மதிப்பு ரூ 10 லட்சம்.. ஆனாலும் வலது கால்களுக்கு பொருத்தமான ஷூக்களையே அவர்கள் திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
எதற்காக வலது காலுக்கு பொருந்தும் ஷூக்களை மட்டும் திருடினர் என்பது வியப்பாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து சம்பவம் சமூகவலைதளங்களில் பரவியது. நெட்டிசன்கள் கூறுகையில் ஒரு வேளை திருடர்களுக்கு இரண்டுமே வலது கால்களாக இருந்திருக்குமோ, அதனால்தான் அதை திருடியுள்ளனரா என கேட்டுள்ளனர்.
அப்படியே ஒற்றை ஷூவை திருடியிருந்தாலும் அதை யார் வாங்குவார்கள் என சிலர் கேட்டுள்ளனர். ஒரு ஷூவை வைத்து கடைக்காரரும் ஒன்றும் செய்ய போவதில்லை, திருடர்களும் ஒன்றும் செய்ய போவதில்லை, இதெல்லாம் வீண் முயற்சி என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். வலது கால் ஷூக்களை மட்டும் திருடியவர்கள் புதிய திருடர்களா, அச்சத்தில் இப்படி திருடிவிட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.