சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘மோக்கா’ புயலாக வலுப்பெற்று, ஒடிசாவை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 13; வேலுார் மாவட்டம் அம்முண்டியில் 12; திருப்பத்துாரில் 10; திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 9 செ.மீ., மழை பதிவானது.
இந்நிலையில், நாளை தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, நாளை மறுதினம் புயலாக வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு, ‘மோக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வலுப்பெற்று, ஒடிசாவை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், நேற்று ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக, அப்பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
இது, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு, நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
எச்சரிக்கை
இன்றும், நாளையும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 9ம் தேதி, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 10ம் தேதி, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 80 கி.மீ., வேகத்திலும் வீசும். தென் மேற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும்.
இந்நாட்களில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள், கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்