வாழும் தெய்வங்களான அன்னையர்களை போற்றும் வண்ணம் ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை (மே 8) அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் அன்னையர்களின் ஆசிர்வாதங்களை பெறுவது ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்கு இன்று வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து ஆசிர்வாதங்களை பெறலாம்.
உலகில் பல நாடுகளில் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் முதன்முதலில் அறிவிக்கப் பட்டது. இந்த நாளே பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர்.
சமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர். அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது. “எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான்.
தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் அன்னையின் தியாகத்தை நினைத்து அவர்களுடன் இந்த நாளை கொண்டாடி மகிழலாம். அன்னையை சந்திக்க முடியாதவர்கள் போனில் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை விட, நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த அன்னையை இந்த நாளில் மனதார போற்றி வணங்குவோம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement