விழுப்புரம்: திண்டிவனத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியது, “இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று கொடுத்தவர் ராமதாஸ். ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டு பின் பாஜக உருவானது. அதுபோல வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டு பாமக உருவானது. நாம் நாட்டுக்கு பெற்று கொடுத்ததை போல வேறு யாரும், எந்த கட்சியும் பெற்றுதரவில்லை. பாமகவுடன் சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத்தாயம் என 34 அமைப்புகள் இயங்கிவருகிறது.
10.5 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு எத்தனை அவமானங்கள், போராட்டங்கள் நடத்தி அரசை கெஞ்சினோம். இதை பெறுவதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும். வன்னியர் சங்க மாநாடு நடத்த அனுமதி தற்போது கிடைக்கவில்லை. விரைவில் நடக்கும். எனவே சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டாம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு இக்கல்வி ஆண்டுக்குள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அரசுக்கு 22 லட்சம் கடிதங்கள் சென்றுள்ளது. இன்னமும் 28 லட்சம் கடிதங்களை அனுப்ப கட்சி நிர்வாகிகள் முயற்சி எடுக்கவேண்டும். இது மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும். இம்மாதத்திற்குள் அளிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க ராமதாஸ் முடிவெடுப்பார். மது ஒழிப்பைப்பற்றி அனைத்து அரசியல் கட்சிகள் பேசும் நிலைக்கு கொண்டுவர ராமதாஸ்தான் காரணம்.
மதுவினால் சமூக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுவை பிரபலப்படுத்த அரசு உள்ளது. மதுவிடமிருந்து அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். 55 ஆண்டுகாலம் இந்த 2 கட்சிகள் ஆண்டது போதுமென்ற மனநிலை மக்களுக்கு வந்துள்ளது. 2026ம் ஆண்டு நாம் உறுதியாக ஆட்சிக்கு வருவோம். சமூக ஊடகத்தில் நமக்கு இருக்கும் பலம் வேறு கட்சிகளுக்கு கிடையாது” இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது, “தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவிட வேண்டாம். மக்களை நம்புங்கள். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நாம்தான் நிரப்பவேண்டும். நம்மிடம் உள்ளது போல மனித வளம் எந்த கட்சியிலும் கிடையாது. வன்னியர் சங்கமும், பாமகவும் இரண்டு தண்டவாளங்களாக இணைந்து நில்லுங்கள்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வாரவிட்டால் யார் வளர்ப்பார்கள். தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்திலிருந்து வந்த வெள்ளைக்காரன் என்று சொல்லிவிடுவேன். ஜாக்கிரதை” இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கௌரவத் தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாலர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொறுப்பு இல்லாவிட்டால் உங்களுக்கு கை அரிக்கிறது: முன்னதாக, “மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு கீழே, ஜால்ரா அடிப்பவர்களுக்கு மட்டும் ஒன்றிய செய்லாளர் பதவியை அளிக்கிறீர்கள். நன்றாக கட்சிக்காக உழைப்பவர்களுக்கு பதவியை கொடுப்பதில்லை. பொறுப்பு இல்லாவிட்டால் உங்களுக்கு கை அரிக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சி நிர்வாகிகள் போராட வேண்டும். 20ம் தேதிக்குள் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் அளிக்கப்படவில்லை என்றால் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவீர்கள்” என்று அன்புமணி எச்சரித்தார்.