சென்னை: தமிழகத்தில் 660 முன்னாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்க ரூ.3.30 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக பேரறிஞர் அண்ணாபிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பில் முன் விடுதலை செய்யப்பட்ட 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு, கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை,சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுய தொழில்கள் தொடங்க தலா ரூ.50 ஆயிரம்வீதம் ரூ.3.30 கோடிக்கான காசோலைகளை வழங்கும் நிகழ்ச்சிசென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு 10 முன்னாள் சிறைவாசிகளுக்குக் காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும்சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சென்னை சரக சிறைத் துறை துணைத் தலைவர் ஆ.முருகேசன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: இனிவரும் காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகள் இடையேயும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், சிறைவாசிகள் தங்களது ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்காக, புத்தகக் கண்காட்சி மூலம் தமிழக சிறைச்சாலைகளுக்கு இலவசமாக 70 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறைச்சாலைகளில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் விரிவுபடுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.