தனது கருப்புக் கொம்பன் காளை மரணம் அடைந்ததையடுத்து அதன் இறுதிச்சடங்கு வீடியோவை பகிர்ந்து கலங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
விஜயபாஸ்கர் காளைமுன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு காளைகளை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். அவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பல மாவட்டங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளன.
வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டுவிஜயபாஸ்கரின் காளைகளுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை பங்கேற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவிழ்த்து விடப்பட்டதும் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த அந்த காளை வெளியே வரும் வழியில் இருந்த கம்பத்தின் மீது மோதியது.
மரணமடைந்த கருப்புக்கொம்பன்இதனால் நிலைக்குலைந்த கருப்புக் கொம்பன் காளை, அங்கேயே மயங்கி விழுந்தது. இதையடுத்து உடனடியாக காளை மீட்கப்பட்டு ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கருப்புக் கொம்பன் காளை கடந்த 4ஆம் தேதி காளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
விஜயபாஸ்கர் உருக்கம்இதையடுத்து விஜயபாஸ்கரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட கருப்புக் கொம்பன் காளைக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இறுதிச்சடங்குகளுக்கு பிறகு கருப்புக் கொம்பன் காளை விஜயபாஸ்கரின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கருப்பு கொம்பன் காளையின் இறுதிச்சடங்கு வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஜயபாஸ்கர், உருக்கமாய் அதன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதயம் கலங்கி தவிக்கின்றோம்”சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் இருந்தபோது, திருவப்பூர் ஜல்லிக்கட்டில் #கருப்பு_கொம்பன் காணாமல் போன செய்தி இடியாய் இறங்கியது. கிட்டதட்ட 2 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்னர் இல்லம் வந்து சேர்ந்தான்.
இல்லம் வந்து சேர்ந்தவனை
மீண்டும் இழந்து தவிப்போம் என
ஒரு கணம்கூட எண்ணியதில்லை.
தமிழ்நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட வாடிவாசலை நெஞ்சுரத்தோடு சந்தித்தவன்
என் கருப்பு கொம்பன்.
கண் இமைக்கும் நொடிகளில் சீறிப்பாய்ந்து
கால் பதித்த களத்தில் எல்லாம்
வெற்றிக்கொடி நாட்டியவன்.
அனல் பறக்கும் வேகத்தில்
சுற்றிச் சுழன்றாலும்,
இல்லம் வந்து விட்டால்
சுட்டிக் குழந்தையாய் மாறி விடுவான்.
மண் பேசும் பெருமைகளையும்,
எண்ணிலடங்கா பரிசுகளையும்,
அள்ளிக் குவித்த கருப்பு கொம்பன்,
சில தினங்களுக்கு முன்பு வடசேரிப்பட்டி வாடிவாசலில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டான்.
தமிழ்நாட்டின் வாடிவாசல்களில் எல்லாம்
பம்பரம் போல் சுற்றிச் சுழன்ற
என் கருப்பு கொம்பன்
இன்று அதிகாலை
தன் பயணத்தை முடித்துக் கொண்டான்.
வாடிவாசல்
உன் வருகைக்கு
கண்கள் குவித்து காத்திருக்கிறது…
நாங்கள்
இதயம் கலங்கி தவிக்கின்றோம்…
எம் கருப்பு கொம்பா…
சென்று வா…
மீளாத்துயரில்… இவ்வாறு உருக்கமாய் பதிவிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அவரது இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்”.
Vijayabaskar C