சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை பார்த்த ஷங்கர் மணிரத்னத்தை வெகுவாக புகழ்ந்துள்ளார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ஏப்ரல் 28ந் தேதி தியேட்டரில் வெளியானது.
இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பொன்னியின் செல்வன் : கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக இயக்கி இருந்தார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்தனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் : லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரம் மற்றும் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யாவின் நடிப்பை புகழ்ந்து வருகின்றனர்.
8ம் நாள் வசூல் : இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது படம் வெளியாகி 8 நாட்களை கடந்தநிலையில் இந்தியாவில் ரூ.130 கோடியை வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னத்தை புகழ்ந்த ஷங்கர் : இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் சார் மிகவும் நுணுக்கமாக பார்த்து பார்த்து வடிமைத்து இருக்கிறார். குறிப்பாக ஐஸ்வர்யாராய் பச்சன் மற்றும் விக்ரம் இருவரின் நடிப்பு அற்புதமாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை உண்மையிலேயே அற்புதம். ரவிவர்மனின் ஃப்ரேம்கள் வசீகரமாக இருந்தன. அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் வல்லுநர்களுக்கும் பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.