சென்னை: பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து.
தமிழின் முன்னணி பாடலாசியரான வைரமுத்து தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், பாரதிராஜாவின் படங்களுக்கு பணம் வாங்கமாலேயே பாடல்கள் எழுதிக்கொடுத்தாராம் வைரமுத்து.
இதனை ஒருமுறை அவர் பெருமையாக சொன்னதும் ஒரே படத்தில் அவருக்கு செட்டில் செய்துள்ளார் ஒரு பிரபலம்.
வைரமுத்துவுக்கு ஒரே படத்தில் செட்டில்:நிழல்கள் படத்தில் இடம்பெற்ற ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் பிரபலமானவர் வைரமுத்து. அதுவரை கவிஞராக இருந்த வைரமுத்து பின்னர் பாடலாசிரியராக வலம் வரத் தொடங்கினார். இளையராஜாவுடன் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வைரமுத்து, ஒருகட்டத்தில் அவரை விட்டு விலகினார்.
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இடையேயான இந்த பிரச்சினைக்கு இன்றுவரை தீர்வே இல்லை. குறிப்பாக நிழல்கள் படத்தில் பாரதிராஜாவின் நண்பராக தான் வைரமுத்துவுக்கு பாடல் எழுதும் வாய்ப்பே கிடைத்தது. இளையராஜாவுடன் பிரச்சினை ஏற்படும் வரை பாரதிராஜாவின் படங்களுக்கு வைரமுத்து தான் பாடல்கள் எழுதினார்.
அதன்பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தது கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் தான். பாரதிராஜா இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த கிழக்குச் சீமையிலே படத்திற்கு வைரமுத்து தான் அனைத்து பாடல்களையும் எழுதினார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார்.
கிழக்குச் சீமையிலே படத்திற்காக வைரமுத்துவுக்கு பேமெண்ட் கொடுக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் தாணு. அப்போது பாடல்கள் எழுதிய சம்பளமாக 50 ஆயிரம் கொடுத்தாராம். அதனை வாங்கிக் கொண்ட வைரமுத்து, “பாரதிராஜா படங்களுக்கு பாட்டு எழுதியதற்காக இதுவரை பணம் வாங்கியதே இல்லை. ஆனால் அத்தனை படத்திற்கும் சேர்த்து இப்போது நீ கொடுத்துவிட்டாய், நீ ஒரு குட்டி தேவர்” என்றாராம்.
இதனை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள தாணு, இருந்தாலும் தனக்கும் வைரமுத்துவுக்கும் பலமுறை நெருடல் வந்துள்ளது. அதேபோல், ஒருமுறை வாலி பிறந்தநாளுக்காக ஒரு விளம்பரம் கொடுத்தேன். அதனைப் பார்த்த வாலி, இந்த விளம்பரம் என்னை கவர்ந்துவிட்டது. இனிமேல் உன் படத்தின் பாடல்களுக்கு நான் காசே வாங்கமாட்டேன் என்றார். சொன்னது போலவே இறுதிவரை பணம் வாங்கவே இல்லை என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் தாணு.