இதுவரை இல்லாத வகையில் அதிமுகவில் முதல்முறையாக பூத் கமிட்டிக்கு தலைவர் மற்றும் செயலாளர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அக்கட்சியில் சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரம் தொண்டர்களுக்கு இந்த பதிவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 1000 வாக்காளர்களுக்கு, 20 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதில் இளம்பெண், இளைஞர் பாசறை மற்றும் மகளிர் அணி சேர்ந்த தலா பேரும், தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த இரண்டு பேரும் கட்டாயமாக இடம்பெற உள்ளார்கள்.
மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியையும் அதிமுக கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. 50 வாக்காளர்களுக்கு ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் பொறுப்பாளராக நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த பகுதி வட்ட, ஒன்றிய செயலாளர் நேரடி ஒருங்கிணைப்பின் கீழ் செயல்பட்டு வந்தார்கள். தற்போது அது முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.
மொத்தமாக தமிழகம் முழுவதும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பூத் கமிட்டிகளுக்கு தலைவர், செயலாளரின் பதவிகளும் உருவாக்கப்பட உள்ளது.
ஏற்கனவே கட்சி நிர்வாகிகளாக உள்ளவர்கள் இந்த பூத் கமிட்டியில் இருக்க முடியாது என்றும், தொண்டர்களே இந்த தலைவர், செயலாளர் உறுப்பினர் பதவிகளில் இருக்க முடியும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.