நியூயார்க்:
அமெரிக்காவில் நேற்று நடந்த ஒரு சம்பவம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது மாலுக்குள் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பீஸ்ட் பட பாணியில் அந்த நபரை சுட்டுக் கொன்றார்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஆலன் நகர். இங்குள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் இருந்தது. அப்போது மாலின் 2-வது தளத்தில் மர்மநபர் ஒருவன் திடீரென இயந்திரத் துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டப்படி ஓடினான்.
இதனால் என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள்ளாக அங்குள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மாலின் தரைத்தளத்தில் தனது குடும்பத்தினருடன் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டதும் உடனடியாக 2-வது தளத்திற்கு ஓடிச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துரத்திச் சென்று மடக்கினார். பிறரை சுடுவதில் இருந்து அவனை திசைதிருப்பியதால், அவனது கவனம் முழுவதும் போலீஸ் அதிகாரி மீது திரும்பியது.
இதையடுத்து, போலீஸ் அதிகாரியை நோக்கி அவன் துப்பாக்கியை நீட்டிய அடுத்த நொடியே, போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்த தோட்டா அவனது தலையை பதம் பார்த்தது. இதில் சுருண்டு விழுந்து அந்த சைக்கோ நபர் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸுக்கு, மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர் தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் உடலை கைப்பற்றிய போலீஸார், அவன் யார், எதற்காக இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டான் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படுவது சர்வ சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு கூட பள்ளி ஒன்றில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 10-க்கும் மேற்பட்ட எல்கேஜி மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 49 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.