லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார்.
கடந்த 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நேற்று முடிசூட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி லண்டன் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக மன்னர் 3-ம் சார்லஸும் அவரது மனைவியும் ராணியுமான கமீலா ஆகியோர் வைர கற்கள் பதிக்கப்பட்ட வண்டியில் பாதுகாவலர்கள் புடைசூழ அரண்மனையிலிருந்து விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர்.
இவ்விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்ட 100 நாடுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 2,300 விருந்தினர்கள் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளின் அரச குடும்பத்தினரும் பங்கேற்றனர். இதுதவிர ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லண்டன் தெருக்களில் கூடியிருந்தனர்.
இந்த விழாவின்போது, கேன்டர்பரி பேராயர் தலைமையில் பாரம்பரிய முறைப்படி பல்வேறு சடங்குகள் நடைபெற்றன. அப்போது பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பாரம்பரிய தங்க அங்கி அணிந்திருந்த 3-ம் சார்லஸ் அரியணையில் அமரவைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட வீர வாள் மற்றும் செங்கோல் வழங்கப்பட்டது. பின்னர் 3-ம் சார்லஸ் தலையில் தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. அப்போது அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராணுவ வீரர்கள் லண்டன் உட்பட நாட்டின் 13 இடங்களில் பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். தேவாலயத்தின் மணி 2 நிமிடங்களுக்கு இசைக்கப்பட்டது. மன்னரை இறைவன் பாதுகாப்பார் என அனைவரும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து அவர் முறைப்படி இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் அமைப்பின் 14 நாடுகளின் மன்னரானார். இதையடுத்து 3-ம் சார்லஸ் மனைவி கமீலா ராணியாக முடிசூடிக் கொண்டார்.
முடிசூட்டு விழா முடிந்ததும், மன்னரும் ராணியும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திலிருந்து பக்கிங்காம் அரண்மனைக்கு தங்க ரதத்தில் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது ஆயிரக்கணக்கான முப்படை வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். லண்டனில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் உள்ள தொலைக்காட்சி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.
முடிசூட்டு விழாவில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், உக்ரைன் அதிபர் மனைவி ஒலீன் ஜெலன்ஸ்கா, காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பைபிள் வாசகங்களை வாசித்தார்.