கன்னியாகுமரியில் திக்குறிச்சியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகர் விஜயகுமார் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகர் வருகை தந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய பிரபாகர், ’கன்னியாகுமரி வழியாகக் கேரளாவிற்குக் கனிமவளங்கள் கடத்தப்படுத்துவதில் அமைச்சர் மனோ தங்கராஜ், அமைச்சர் துரைமுருகனுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது. அதிமுக ஆட்சியில் கனிமவள கடத்தல் குறித்துப் பேசி, தொடர்ந்து போராட்டங்களை நடத்திய மனோ தங்கராஜ், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றார் என்று குற்றம் சாட்டினார். குமரியில் இருந்து தினமும் 500 லாரிகளில் கனிமவளங்கள் கடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ’இதில் அமைச்சர் துரைமுருகனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா? அல்லது முதலமைச்சருக்குத் தெரியாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் 2 அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என்று விஜய் பிரபாகர் கூறியுள்ளார்.
மேலும், திராவிட மாடல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, திராவிட மாடல் ஆட்சி அறிக்கை வடிவில் மட்டுமே உள்ளது. செயல்பாட்டில் இல்லை என்று கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்படி ஊழல் செய்திருந்தால் அதற்கு நீதிமன்றம் தான் பதிலளிக்க வேண்டும் என்றும், தவறு செய்திருந்தால் அதற்குத் தக்க தண்டனை அனுபவிப்பார்கள். இல்லையென்றால் குற்றச்சாட்டில் இருந்து வெளியில் வருவார்கள் என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நன்றாக உள்ளதாகப் பதிலளித்தார்.