சென்னை: “திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் மட்டுமின்றி, ஓட்டுப் போடாவதர்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு ‘ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி’ என்ற சாதனை மலரை’ நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், இன்று (மே 7) முதல் 9-ஆம் தேதி வரை திமுக ஆட்சி குறித்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியது: “விமர்சனங்கள் குறித்து நான் இம்மியளவும் கவலைப்படுவதில்லை. நல்லவற்றை ஏற்றுக் கொள்கிறேன். கெட்டவற்றை புறக்கணித்து விடுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்சிப் பொறுப்பேற்றபோது இதே இடத்தில் உங்களை எல்லாம் சந்தித்து ஒன்று சொன்னேன். இந்த ஆட்சி திமுகவுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமின்றி, ஓட்டுப் போடாதவர்களுக்கும் சேர்த்துதான்.
ஓட்டுப் போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டுப்போடாமல் விட்டதற்காக வருத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் என்னுடைய ஆட்சி இருக்கும் என்று கூறியிருந்தேன். அப்படித்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளும் இந்த ஆட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த நீங்கள், வரக்கூடிய ஆண்டுகளிலும் தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.