கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: ‘முஸ்தபா முஸ்தபா’.. வைரலாகும் காங்கிரஸ் பெருந்தலைகளின் வீடியோ.!

கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் ரேஸில் இருக்கும் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இணைந்து உரையாடும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடாகாவில் இன்னும் மூன்று நாட்களில் அதாவது மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் என்பது பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தென் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதாலும், அங்கு காங்கிரஸ் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் 2023 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி மக்களுக்கு திருப்தி அளிக்க வில்லை எனக் கூறி 132 முதல் 140 இடங்களில் காங்கிரஸ் தான் வெற்றி பெரும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வென்றால் மட்டுமே மாநிலத்தில் ஆட்சியமைக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளோமா படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.1500, 200 யுனிட் வரை இலவச மின்சாரம் என காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் மக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் வெற்றி என்பது 70 சதவிகிதம் உறுதியாகி விட்டாலும், இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே காங்கிரஸ் பணியாற்றி வருவதும் கேள்விகளை எழுப்பியது.

முன்னாள் முதல்வரும் சீனியர் தலைவருமான சித்தராமையா மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோரிடையே முதல்வருக்கான ரேஸ் உள்ளது. இருவரும் மக்களுடைய ஆதரவு பெற்ற தலைவர்கள் தான். இதனால் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னாள் அறிவிப்பு வெளியிட்டால், இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கிடையே முரண்கள் ஏற்படக்கூடும் என காங்கிரஸ் யோசிக்கிறது.

அதை சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோரிடையே ஈகோ யுத்தம் நிலவுவதாக ஊடகங்கள் பேசி வந்த நிலையில், ‘‘காங்கிரஸ் தலைமையும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தான் முதல்வரை முடிவு செய்யும். மற்றபடி காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி, என்னக்கு முதல்வராக வேண்டும் என்று எண்ணம் இருப்பதை போல டிகே சிவக்குமாருக்கும் எண்ணம் இருப்பதில் தவறில்லை’’ என சித்தராமையா முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்தநிலையில் இருவரும் இதயப்பூர்வமாக ஒற்றுமையாக உள்ளதாக வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்து டிகே சிவக்குமார் தனது ட்விட்டர் பதிவில், ‘‘சில உரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தி, அவை மறக்கமுடியாதவையாக மாறி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளநிலையில், நானும் சித்தராமையாவும் மனம் விட்டு பேசியுள்ளோம். அப்படி என்ன பேசி இருக்கிறோம் என்பதை வீடியோவில் காணுங்கள்’’ என பதிவிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். கர்நாடகா தேர்தல் பரபரப்பிற்கு மத்தியில் இந்த வீடியோ பேசு பொருளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.