குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41,600-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமா? – NCRB வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 41,600-க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல்போயிருப்பதாகவும், காவல்துறை காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்குகளில் மெத்தனப்போக்கோடு நடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் மோடி

இது குறித்துப் பேசிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், குஜராத் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா, “2021-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, அகமதாபாத், வதோதராவில் 2019-20-ல் மட்டும் 4,722 பெண்கள் காணாமல்போனதாகத் தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அதிகாரபூர்வ புள்ளிவிவர தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும், 2020-ம் ஆண்டில், 8,290 பெண்கள் காணாமல்போயிருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காணாமல்போன பெண்களின் மொத்த எண்ணிக்கை 41,621 என அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.

கடத்தல்

சில காணாமல்போன வழக்குகளில், சிறுமிகளும், பெண்களும் குஜராத்தைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவதை நான் அவதானித்திருக்கிறேன். காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறை தீவிரமாகக் கையாளாததுதான் பெண்கள் கடத்தப்படும் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம். இது போன்ற வழக்குகள் கொலையைவிட தீவிரமானவை.

பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அவர்களின் பெற்றோர், உறவினர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். எனவே, காணாமல் போனவர்களின் வழக்கை ஒரு கொலை வழக்கைப் போல கடுமையாக விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

இது குறித்து முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ராஜன் பிரியதர்ஷி பேசுகையில், “சிறுமிகள் காணாமல்போனதற்கு மனித கடத்தல்தான் காரணம். எனது பதவிக்காலத்தில், காணாமல்போன பெண்களில் பெரும்பாலோர் சட்டவிரோத மனித கடத்தல் குழுக்களால் கடத்தப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களை நான் அறிவேன்.

கேடா மாவட்டத்தில் நான் காவல் கண்காணிப்பாளராக (SP) இருந்தபோது, அந்த மாவட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஏழைப் பெண்ணைத் தூக்கிச் சென்று, தனது சொந்த மாநிலத்தில் விவசாயக் கூலி வேலைக்காக விற்றுவிட்டார். இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்பது சற்று இலகுவானது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் இப்படி மீட்க முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர்

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய குஜராத் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், “கேரளாவின் பெண்களைப் பற்றி பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான குஜராத்தில் 41,00-க்கும் மேற்பட்ட பெண்கள் காணவில்லை” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.