விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம், இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வடமாநிலங்களில் இப்படம் நேற்று முன்தினம் முதல் நாளில் ரூ.6.5 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு மத்திய பிரதேசத்தில் வரிவிலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது: “லவ் ஜிஹாத் என்ற வலையில் சிக்கும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி நாசமாக்கப்படுகிறது என்பதை ‘தி கேரளா ஸ்டோரி’ படம் காட்டுகிறது. இது பயங்கரவாதத்தின் வடிவமைப்பையும் அம்பலப்படுத்துகிறது.
நாங்கள் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக ஒரு சட்டத்தை மத்திய பிரதேசத்தில் கொண்டு வந்தோம். இந்தப் படம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இதனை அனைவரும் பார்க்க வேண்டும், என்பதால், மத்தியப் பிரதேச அரசு இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கிறது.” இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் அதில் பேசியுள்ளார்.