பீஜிங்: சீனாவில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் அந்நாட்டு அரசு ஈடுபடுவதாகவும், வறுமை தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை அழிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. அந்நாடு எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கவில்லை. கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கியதும், சில தளர்வுகளை அளித்தது. ஆனால், கட்டுப்பாடுகள் காரணமாக அந்நாட்டு மக்களை வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சீனாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
உலகிளவில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வரும் சீனா, அந்நாட்டில் நிலவும் வறுமையை மறைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. வறுமையை காட்டி வெளியிடப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இருந்து அழிக்கப்படுகின்றன. சென்சார் காரணமாக, அந்நாட்டில் உள்ள மக்கள் பலர், சீனாவில் நிலவும் வறுமை பற்றி தெரியாத நிலையில் உள்ளனர்.
அந்த வகையில், ஓய்வு பெற்ற சீன பெண் அதிகாரி ஒருவர், தனக்கு கிடைக்கும் மொத்த பென்சனான, சீன பண மதிப்பில் 100 யுவானில் என்ன மளிகை பொருட்கள் வாங்கலாம் என சிந்தித்து கொண்டிருந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை சீன அதிகாரிகள் நீக்கினர்.
சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைதள பக்கத்தில், ‛‛ என் முகத்தை தினமும் தண்ணீரால் சுத்தம் செய்கிறேன். ஆனால், என் முகத்தைவிட என் பர்ஸ் சுத்தமாக இருக்கிறது” என்ற பாடலை பாடி பதிவேற்றுள்ளார். இந்த பாடல் அங்கு வைரலாக துவங்கியதை கண்ட அதிகாரிகள், அந்த பாடலை நீக்கியதுடன், அந்த சமூக வலைதள கணக்கையும் நீக்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு, சீனாவில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், கோவிட்டால் பாதிக்கப்பட்ட போது, உள்ளூர் அதிகாரிகளால் அவர் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளானார்.
அவர், சீனாவில் கடினமான உழைப்பாளி என பெயர் பெற்றார். அவர் குறித்த வீடியோக்கள் பரவ துவங்கியது. அதேநேரத்தில், அவர் குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நபரின் மனைவியை யாரும் சந்திக்க முடியாதபடி வீட்டின் முன்பு உள்ளூர் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சீன அரசின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‛‛ இது வேண்டும் என்றே சோகத்தை வெளிப்படுத்தும் வீடியோ. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசின் நற்பெயருக்கு சேதம், தீங்கு விளைவிக்கும் தகவல்களை அளிக்கும் வீடியோக்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான வீடியோக்களை பதிவிடுவது இந்த பிரிவால் தடை செய்யப்படுகிறது எனக்கூறியுள்ளது. இவ்வாறு சீனாவில் வறுமையை மறைக்கும் செயல்களில் அந்நாடு ஈடுபடுகிறது.
சீனா குறித்து நேர்மறையான செய்திகள் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த நான்கு தசாப்தங்களில் ஏராளமானோரை வறுமையில் இருந்து மீட்டெடுத்தோம் என தற்பெருமை பேசுகிறது. ஆனால், மாசேதுங்கின் கீழ் முழு நாட்டையும் எப்படி வறுமையில் தள்ளியது என்பதை குறிப்பிட மறுக்கிறது. சீனா பொருளாதார சக்தியாக உயர்ந்தாலும் போதுமானசமூகவ லையை கொண்டிருக்கவில்லை. ஏழை மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் பற்றிய எந்த விவாதத்தையும் விவாதத்தை தடுக்க அரசு ஆர்வமாக உள்ளது.
சீனாவில் வறுமையின் முறையான காரணங்களை செய்தி ஊடகங்கள் அரிதாகவே தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்